ஸ்ரீநகர்
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி கவலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், பா.ஜ.க. ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பை விட பசுக்களின் பாதுகாப்புக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக விமர்சித்துள்ளார். பசுக்களை கொன்றதாக சந்தேகிக்கப்படுபவர்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தி உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், ஆனால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் தொடர்ந்து பரோல் பெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவத்திலும், வழக்கை குற்றப்பிரிவுக்கு மாற்றி விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்று மெகபூபா வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில், பெண்களின் பாதுகாப்புக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
“பசு பாதுகாப்பு என்ற பெயரில் அளிக்கும் முக்கியத்துவத்தில் பாதியாவது பெண்களின் பாதுகாப்புக்கு கொடுத்தால், பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நாடாக இந்தியா மாறும்” என்று மெகபூபா வலியுறுத்தியுள்ளார்.