கவுகாத்தி,
126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 47 தொகுதிகளுக்கு கடந்த 27-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. 39 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் நாளையும் (ஏப்ரல் 1) 40 தொகுதிகளில் முன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் பட்ருதீன் ஜமால் என்பவரின் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, அஞ்சலிக் ஞான மோட்சா, ராஷ்டிரிய ஜனதா தளம், போடோலேண்ட் மக்கள் முன்னணி, இடது சாரிகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாஜக கூட்டணியில் அசோம் ஞான பரிஷத் கட்சி, ஐக்கிய மக்கள் விடுதலை கட்சி இடம்பெற்றுள்ளன. தற்போது அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜக-வினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, அக்கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் அசாமில் தொடர்ந்து பிரசாரம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அம்மாநிலத்தின் சிரங் மாவட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசாரத்தில் பேசிய அமித்ஷா, அசாமில் ராகுல்காந்தி தற்போது சுற்றுலா பயணியாக உள்ளார். அவர் பட்ருதீன் ஜமாலை அசாமின் அடையாளம் என்று கூறுகிறார். நீங்கள் கூறுங்கள் அசாமின் அடையாளம் சங்கர் தேவ், உபேந்திர நாத், பூபின் ஹசாரியாவா? அல்லது பட்ருதீன் ஜமாலா? அசாமின் அடையாளமாக பட்ருதீன் ஜமால் இருக்க முடியாது.
வளர்ச்சியடைந்த அசாம் என்பது, வெள்ளப்பெருக்கு இல்லாத அசாமாக இருக்கவேண்டும். வெள்ளப்பெருக்கு இல்லாத அசாமை 5 ஆண்டுகளில் உருவாக்குவோம் என்று உறுதியளித்துள்ளோம். அமைதியான அசாமிற்காக போடோ உடன்படிக்கையில் சொல்லப்பட்டுள்ள உத்தரவாதங்களை 2022 ஆம் ஆண்டுக்குள் மத்திய அரசு அமல்படுத்தும் என்றும் நான் உத்திரவாதம் அளிக்கிறேன் என்றார்.