டெல்லியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் 
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியை அவமதிப்பதா..? காங்கிரஸ் தலைவர் கார்கேவை கண்டித்து நாடு முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்

தலைநகர் டெல்லியில் உள்ள கார்கே வீட்டின் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பாஜக தலைவர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி மற்றும் அவரது தந்தையை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் கார்கே பேசியதாக கூறி, நாடு முழுவதும் இன்று பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கார்கேவுக்கு கண்டனம்

பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு பேசும்போது, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை காங்கிரஸ் சிறைக்கு அனுப்பும் என்று கூறினார். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு நபர் திடீரென இடைமறித்து கூச்சலிட்டு பேசினார். அவர் பேசிய வார்த்தைகளில் ‘மோடி எங்கும் போகமாட்டார்’ என்ற வார்த்தை கார்கேவின் காதில் விழுந்தது.

இதனால் டென்ஷன் ஆன கார்கே, “மோடியின் தந்தையாக இருந்தாலும், அவரும் போகத்தான் வேண்டியிருக்கும்” என்று பதிலடி கொடுத்தார். அவரது பேச்சு பா.ஜ.க. தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

‘பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே மன்னிப்பு கேட்கவேண்டும், கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

டெல்லி பாஜக தலைவர் கைது

தலைநகர் டெல்லியில் உள்ள கார்கே வீட்டின் அருகே நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சேனா பவன் சர்க்கிளில் இருந்து ராஜாஜி மார்க்கில் உள்ள கார்கேவின் இல்லத்தை நோக்கி மாநில பா.ஜ.க. தலைவர் ஹரிஷ் மல்கோத்ரா மற்றும் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஹரிஷ் மல்கோத்ரா உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். கார்கேவின் வீட்டிற்கு வெளியே ஏராளமான பா.ஜ.க.வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாட்னாவில் நடைபெற்ற போராட்டத்தின்போது கார்கே உருவ பொம்மை எரிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் கைது செய்யப்ப்டடனர். இதேபோல் பெங்களூருவிலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT