புதுடெல்லி,
புதுடெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோரின் முன்னிலையில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மையக்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல். முருகன், முன்னாள் அமைச்சர், மாநில நிர்வாகிகள் மற்றும் முக்கியக் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு, உள்துறை மந்திரி அமித்ஷா சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். அதில், தமிழகத்தில் பாஜக வாக்கு வங்கியை இழக்கவில்லை. தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாஜகவை பலப்படுத்த வேண்டும்.
சட்டமன்ற தேர்தல் முடிவுகளை தோல்வியாக கருத வேண்டாம். தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்துவிட்டு, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அடுத்தக் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலை மனதில் வைத்து பாஜக தங்களின் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.