தேசிய செய்திகள்

புதுச்சேரி தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க.: காரைக்கால் தெற்கு தொகுதியின் வேட்பாளர் அறிவிப்பு

9 வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள காரைக்கால் தொகுதியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் ஏப்ரல் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கலுக்கு நாளை (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். கடந்த முறைபோல, வருகிற சட்டசபை தேர்தலிலும் நீண்ட இழுபறிக்கு பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதில் பா.ஜ.க. கட்சியில் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் அந்த கட்சியின் தேசியத்தலைவர் நிதின் நபின் தலைமையில் கூடியது.

கூட்டத்தில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், உள்துறை மத்திரி அமித்ஷா மற்றும் மத்திய தேர்தல் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 10 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்து இருந்தது. இந்த நிலையில் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங், ஒரு தொகுதி தவிர 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை டெல்லியில் இருந்து வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:-

மண்ணாடிப்பட்டு- அமைச்சர் நமச்சிவாயம், ஊசுடு- தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., காலாப்பட்டு- கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ராஜ்பவன்- மாநி லத் தலைவர் வி.பி.ராமலிங்கம், முதலியார்பேட்டை- அமைச்சர் ஜான்கு மார், மணவெளி- சபாநாயகர் செல்வம், திருநள்ளாறு- ராஜசேகரன் எம்.எல்.ஏ, நிரவி-திருப்பட்டினம்- மீனாட்சி சுந்தரம், மாகி - தினேசன். 9 வேட்பாளர்களும் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதில் ஊசுடு தொகுதியில் கடந்த சட்ட சபை தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜனதா முன்னாள் அமைச்சர் சாய்.சரவணன் குமார் எம்.எல்.ஏ.வுக்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதேபோல் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்பவன் தொகுதியில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராக உள்ள லட்சுமி நாராயணன், மங்கலம் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக இருந்து வரும் தேனீ.ஜெயக்குமார் ஆகிய 2 பேருக்கும் நடைபெற உள்ள தேர்தலில் அத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதில் மங்கலம் தொகுதியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார். ராஜ்பவன் தொகுதி கூட்டணி கட்சியான பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தவிர என்.ஆர்.காங்கிரசுக்கு அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியல் இன்னமும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் காரைக்கால் தெற்கு பா.ஜ.க. வேட்பாளராக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் அருள்முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் தற்போது 10வது தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்பு வெளியாகி உள்ளது.