ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம், நக்சலைட்டுகள் பிடியில் இருந்து விடுபட்டதாக கடந்த மார்ச் 31-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நக்சலைட்டுகள் ஏற்கனவே மண்ணில் புதைத்து வைத்த வெடிகுண்டுகளை அடையாளம் கண்டு, செயலிழக்க வைக்கும் பணி நடந்து வருகிறது. சரண் அடைந்த நக்சலைட்டுகள் அளித்த தகவலின்பேரில், இப்பணி நடக்கிறது. மாநில போலீசின் மாவட்ட ரிசர்வ் படை தலைமையிலான குழுவில், பஸ்தார் பைட்டர்ஸ், மாவட்ட படை ஆகியவற்றின் வீரர்களும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சத்தீஷ்கார் மாநிலம் கங்கர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்க வைக்கும் பணியில் மாவட்ட ரிசர்வ் படையினர் ஈடுபட்டனர். அப்போது மண்ணில் புதைந்து கிடந்த ஒரு குண்டை வெளியே எடுக்க முயன்றபோது அந்த குண்டு திடீரென வெடித்தது. இதில், 4 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
குழுவுக்கு தலைமை தாங்கிய இன்ஸ்பெக்டர் சுக்ராம்வட்டி (வயது 40), காவலர்கள் கிருஷ்ணகோம்ரா(35), சஞ்சய்காத்பலே(29) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காயம் அடைந்த பர்மானந்த் கோம்ரா(29) என்ற காவலர், ராய்ப்பூருக்கு ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர்களில் இன்ஸ்பெக்டர் வட்டி, பிஜப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர். மற்ற 3 பேரும் கங்கர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். வெடிகுண்டு செயலிழக்க செய்யும் படையும் சம்பவத்தின்போது உடன் இருந்தது.
துணை முதல்-மந்திரி விஜய் சர்மா, இந்த சம்பவம் மிகவும் துயரமானது என்றும், வீரமரணம் அடைந்த போலீசாரின் குடும்பங்களுக்கு ஒட்டு மொத்த அரசும் துணை நிற்கும் என்றும் கூறியுள்ளார். சத்தீஷ்கார் மாநிலம் நக்சலைட்டுகள் பிடியில் இருந்து விடுபட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு நடந்த நக்சலைட்டு தொடர்பான முதல் சம்பவம் இதுவாகும். இந்த ஆண்டு, நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் முதலாவது உயிர்ப்பலி சம்பவமும் இதுவாகும்.