சண்டிகர்,
அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இன்று காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக காவல்துறைக்கு சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் தரப்பில் இருந்து புகார்கள் அளிக்கப்பட்டன.
இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கிடைக்காத நிலையில், வெடிகுண்டு மிரட்டல்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது.
இது குறித்து போலிசார் கூறுகையில், “மர்ம நபர்கள் சிலர் காலிஸ்தான் தேசிய ராணுவம் என்ற பெயரில் மின்னஞ்சல்கள் அனுப்பி போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்கள் ஏப்ரல் 29-ந்தேதியை 40-வது காலிஸ்தான் பிரகடன தினமாக அரியானா முதல் மந்திரி நயாப் சயினி அறிவிக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் டெல்லி செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த மிரட்டல்கள் அனைத்தும் போலியானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.