தேசிய செய்திகள்

காதல் தோல்வியால் வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசிய சிறுவன் கைது

கல்வீசிய சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

திருவனந்தபுரம்,

கேரளம் மாநிலம் திருவனந்தபுரம்-மங்கலாபுரம் இடையே வந்தே பாரத் ரெயில் கடந்த 7-ந்தேதி வழக்கம்போல் இயக்கப்பட்டது. இரவு 7.10 மணியளவில் ஆலுவா-அங்கமாலி இடையே நெடும்பாஞ்சேரி விமான நிலையத்தின் அருகே உள்ள தண்டவாளத்தில் வந்தபோது வந்தே பாரத் ரெயிலின் சி-9 என்ற பெட்டியின் வெளிப்பகுதியில் திடீரென சத்தம் கேட்டு, ஜன்னல் கண்ணாடியின் ஒருபகுதி உடைந்து காணப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்த ஆலுவா ரெயில்வே பாதுகாப்பு படையினர் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில் ரெயில் மீது மர்மநபர் கல்வீசியதும், அதனால் ஜன்னல் கண்ணாடி உடைந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கல்வீசிய சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் ரெயில் மீது கல்வீசியது 18 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த சிறுவனை பிடித்து விசாரித்தனர். அப்போது காதலி என்னை புறக்கணித்து விட்டதாகவும், காதல் தோல்வியால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக அந்த சமயத்தில் வந்த ரெயில் மீது 3 முறை கல்வீசியதாகவும், அதில் ஒரு கல் ரெயில் மீது பட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்ததாகவும் சிறுவன் தெரிவித்தான். இதையடுத்து சிறுவனை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்து ஆலுவா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT