திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 முதல் 20-ந்தேதி வரை 9 நாட்கள் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது. விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையாக சாலையில் அங்குரார்ப்பணம் நடக்கிறது. அதையொட்டி விஸ்வக்சேனர் தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதி களில் உலா வருகிறார்.
வைகானச ஆகம விதியின்படி நவராத்திரி பிரம்மோற்சவம் சிறப்பாக நடக்க வேண்டி ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்து அங்குரார்ப்பணம் நடத்தப்படுகிறது. விஸ்வக்சேனர் வசந்த மண்டபத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறார். அங்கு விஸ்வக்சேனர் முன்னிலையில் அர்ச்சகர்கள் புற்றுமண் சேகரித்து பூமி தாய்க்கு பூஜைகள் செய்ததும், 9 வகையான தானியங்கள் புற்றுமண்ணில் விதைக்கப்படுகின்றன. இந்தச் சடங்கு பீஜவாபனம் என்று அழைக்கப்படுகிறது. அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி முடிந்ததும் 12-ந்தேதியில் இருந்து பிரம்மோற்சவ விழா தொடங்குகின்றன.