பூபேந்தர் யாதவ்  
தேசிய செய்திகள்

பிரிக்ஸ் சுற்றுச்சூழல் மந்திரிகள் மாநாடு: பூபேந்தர் யாதவ் பங்கேற்பு

4 முக்கிய அறிவு தொகுப்பு புத்தகங்களை மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் மற்றும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் வெளியிட்டனர்.

புதுடெல்லி,

12-வது பிரிக்ஸ் நாடுகளின் சுற்றுச்சூழல் மந்திரிகள் கூட்டம் புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தியாவின் பிரிக்ஸ் தலைமையின் கீழ் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை மந்திரி பூபேந்தர் யாதவ் தலைமை தாங்கினார்.

உறுப்பு நாடுகள்

இந்த மாநாட்டில் பிரிக்ஸ் அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் சுற்றுச்சூழல் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

4 முக்கிய அம்சங்கள்

மீள்திறன், புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நீடித்த நிலைத்தன்மைக்காக கட்டமைத்தல் என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்த ஆண்டு கூட்டத் தொடர் நடத்தப்பட்டது. இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ள இந்தியா சார்பில் 4 முக்கிய முன்னுரிமை பகுதிகள் முன்வைக்கப்பட்டன.

காடு வளர்ப்பு

சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான வாழ்க்கை முறை, காடு வளர்ப்பு, சுழற்சி பொருளாதாரம் மற்றும் பருவநிலை மாற்ற நடைமுறைகளை ஏற்று நடத்தல் ஆகிய அம்சங்கள் குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

புத்தகங்கள் வெளியீடு

மாநாட்டின் போது, பிரிக்ஸ் சுற்றுச்சூழல் பணிக்குழு தயாரித்த 4 முக்கிய அறிவு தொகுப்பு புத்தகங்களை மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் மற்றும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் வெளியிட்டனர். கூட்டத்தின் நிறைவாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பிரிக்ஸ் நாடுகள் இணைந்து செயல்படுவதை உறுதி செய்யும் கூட்டு மந்திரிகள் அறிக்கை ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மாநாட்டில் மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் பேசியதாவது:-

சாதனை

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2005 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியா தனது மாசு உமிழ்வு தீவிரத்தை 37 சதவீதத்திற்கும் மேலாக குறைத்து சாதனை படைத்துள்ளது.

ஒருமித்த கருத்து

மேலும், இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் பாதிக்கும் மேலானது தற்போது தூய்மையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் மூலமாகவே பெறப்படுகிறது. பிரிக்ஸ் அமைப்பின் தலைவராக, வெளிப்படையான, ஆக்கபூர்வமான மற்றும் ஒருமித்த கருத்து அடிப்படையிலான உரையாடலை வளர்ப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என்றும், அனைத்து உறுப்பு நாடுகளின் கண்ணோட்டங்களையும் பங்களிப்புகளையும் இந்தியா பெரிதும் மதிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.