தேசிய செய்திகள்

பெங்களூரு-லண்டன் இடையே 2027 அக்டோபர் வரை தினசரி 2 விமான சேவைகள் - பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவிப்பு

பெங்களூரு-லண்டன் இடையே தினந்தோறும் 2 விமானங்களின் சேவையை கடந்த ஜூன் 2-ந்தேதி பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

பெங்களூரு,

பெங்களூரு மற்றும் லண்டன் இடையே இயக்கப்படும் 2 தினசரி விமான சேவையை அக்டோபர் 2027 வரை நீட்டிக்கப்போவதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

முன்னதாக கோடைக்காலத்திற்கான குறுகிய கால சேவையாக பெங்களூரு-லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் இடையே தினந்தோறும் 2 விமானங்களின் சேவையை கடந்த ஜூன் 2-ந்தேதி பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

அந்த விமான சேவை கோடைக்காலத்தை தாண்டி தற்போது வரை தொடர்ந்து வரும் நிலையில், 2027-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை பெங்களூரு-லண்டன் இடையேயான தினசரி விமான சேவை நீட்டிக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் அடுத்த கோடைக்காலத்தில் இரு நகரங்களுக்கு இடையே 78,000-க்கும் மேற்பட்ட பயணிகள் கூடுதலாக பயணிக்க முடியும் என்று பிரிட்டிஷ் ஏர்வே தெரிவித்துள்ளது. தற்போது, ​​பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களை லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்துடன் இணைக்கும் வகையில் வாரத்திற்கு 70 விமான சேவைகளை இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT