பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள பைரப்பனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ்(வயது 30). இவர் நாய்க் கூண்டுகள் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவியின் தம்பி ரஞ்சித்(வயது 24).
ரஞ்சித்திற்கும், ஸ்ரீவாசின் தங்கைக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஸ்ரீவாசின் தங்கைக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட நிலையில், அவர் தனது மைத்துனர் ரஞ்சித்திடம் இந்த தொடர்பை துண்டித்துவிடுமாறு கூறி எச்சரித்துள்ளார். ஆனால் ரஞ்சித் ஸ்ரீவாசின் தங்கையுடனான கள்ள உறவை தொடர்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தை பேசி தீர்த்துவிடலாம் என்று கூறி ரஞ்சித்தை தனது வீட்டின் அருகே உள்ள பகுதிக்கு வருமாறு ஸ்ரீநிவாஸ் அழைத்துள்ளார். இதன்படி, ரஞ்சித் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தபோது, ஸ்ரீநிவாஸ் தான் மறைத்து வைத்திருந்த இரும்புக் கம்பியால் ரஞ்சித்தை பலமாக தாக்கினார்.
இதில் படுகாயமடைந்த ரஞ்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை காரில் ஏற்றிக் கொண்டு ஸ்ரீநிவாஸ் நேராக காவல் நிலையத்திற்கு சென்று போலீசில் சரணடைந்தார். ரஞ்சித்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், ஸ்ரீநிவாசை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.