தேசிய செய்திகள்

எல்லையில் கடத்தல் தடுப்பு பணியில் கொடூரம்: படையினரை கடுமையாக தாக்கிய கும்பல்; 8 பேர் அதிரடி கைது

பணியில் இருந்தபோது வீரர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பற்றி அறிந்து, முதல்-மந்திரி மாணிக் சஹா, டி.ஜி.பி.க்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.

அகர்தலா

திரிபுரா எல்லையில் கடத்தல் தடுப்பு பணியின்போது, படையினரை கும்பல் கடுமையாக தாக்கிய சம்பவத்தில் 8 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

திரிபுராவில் செபாஹிஜலா மாவட்டத்தில் பாக்ஸ்நகர் பகுதியில் ஆஷாபாரி என்ற இடத்தில், சட்டவிரோத கடத்தல் கும்பல் தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலை அறிந்து, ஜீப் ஒன்றில் எல்லை பாதுகாப்பு படையினர் சென்றனர்.

எல்லையில் கடத்தல்

வங்காளதேச எல்லையில் அமைந்துள்ள அந்த பகுதியில், சட்டவிரோத கடத்தல் தொடர்பாக விசாரிக்க சென்றபோது, தகவல் அறிந்து கிராமத்தில் இருந்த பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் கம்புகள், தடிகள் உள்ளிட்ட ஆயுதங்களை தூக்கிக்கொண்டு ஓடி வந்தனர்.

அவர்கள் கடத்தல் தடுப்பு பணிக்காக சென்ற வீரர்களை கடுமையாக தாக்கினர். வீரர்களின் ஜீப் அடித்து நொறுக்கப்பட்டது. இதில், முன்பக்க, பின்பக்க கண்ணாடிகள் நொறுங்கி சேதமடைந்தன. முகப்பு விளக்குகளும் உடைக்கப்பட்டன. படையினரின் துப்பாக்கியை அந்த கும்பல் அடித்து, பறித்து சென்றது. இந்த காட்சி தொடர்பான வீடியோ ஒன்றும் வைரலானது.

முதல்-மந்திரி உத்தரவு

இதில், உதவி அதிகாரி மட்டத்திலான ஒருவர் உள்பட 4 வீரர்கள் காயமடைந்தனர். பணியில் இருந்தபோது வீரர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பற்றி அறிந்து, முதல்-மந்திரி மாணிக் சஹா, டி.ஜி.பி.க்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டு கிராமவாசிகள் 19 பேர் மீது வழக்கு பதிவானது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். வீரர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட துப்பாக்கியும் மீட்கப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT