தேசிய செய்திகள்

புல்லட் ரெயில் திட்டம்: சூரத் - பிலிமோரா இடையே 50 கி.மீ. தூரத்திற்கு மின்மயமாக்கல் பணிகள் நிறைவு

அகமதாபாத்-மும்பை இடையே 508 கி.மீ தூரம் கொண்ட புல்லட் ரெயில் திட்டத்திற்கு மேம்பாலங்கள், ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

காந்தி நகர்,

இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து மராட்டியத்தின் மும்பைக்கு புல்லட் ரெயில் இயக்கப்பட உள்ளது. 508 கி.மீ தூரம் கொண்ட புல்லட் ரெயில் திட்டத்திற்கு மேம்பாலங்கள், ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மின்மயமாக்கல் பணிகள் நிறைவு

இந்த நிலையில், புல்லட் ரயில் திட்டத்தின் ஒரு பகுதியான குஜராத்தின் சூரத் - பிலிமோரா இடையிலான 50 கி.மீ உயர்மட்ட வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ளது. ஜப்பான் நாட்டின் ஷன்கன்சென் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான 2x25 கிலோவோல்ட் மேல்மட்ட மின் இழுவை அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. வழித்தடத்தில் தடையற்ற மின்சார வழங்கலுக்காக 14 ஈர்ப்பு துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

20-ந்தேதி முதல்

வருகிற 20-ந்தேதி முதல் மின்கம்பிகள் மற்றும் தண்டவாளங்களில் உயர்தர மின்சாரம் பாயவுள்ளதால், அப்பகுதி மக்கள் மற்றும் தொழிலாளர்கள் யாரும் மின் வழித்தடங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் என தேசிய அதிவேக ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் எச்சரிக்கை விடுத்துள்ளது. சூரத் - வாபி இடையிலான முதற்கட்ட புல்லட் ரெயில் சேவையை 2027-க்குள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT