தேசிய செய்திகள்

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் லாரி மீது மோதி தீப்பிடித்த பேருந்து - 8 பேர் உயிரிழப்பு

பேருந்தில் இருந்த பயணிகள் 5 பேர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஜெய்ப்பூர்,

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில், இன்று அதிகாலை பேருந்து ஒன்று லாரி மீது மோதி தீப்பிடித்ததில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 24 பேர் படுகாயமடைந்தனர்.

தீப்பிடித்த வாகனங்கள்

ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் உள்ள தனவாடா பகுதி அருகே, இன்று அதிகாலை டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டது. மோதலின் தாக்கத்தால் இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரியத் தொடங்கின.

தீயில் கருகி உயிரிழப்பு

தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த பேருந்து ரிஷிகேஷில் இருந்து இந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் 5 பேர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுமார் 27 பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.