தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி

கொண்டை ஊசி வளைவில் பேருந்து திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் ராம்நகர் பகுதியில் உள்ள ககோர் கிராமத்திற்கு அருகே இன்று காலை பேருந்து ஒன்று மலைப்பாதையில் இருந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர். கொண்டை ஊசி வளைவில் பேருந்து திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் இறங்கி, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். பின்னர் போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று காயமடைந்த 20 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் உடல்களும் அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து மத்திய மந்திரி ஜிதேந்திர சிங், உதம்பூர் துணை ஆட்சியர் மிங்கா ஷெர்பாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார். இந்த கோர விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.