தேசிய செய்திகள்

ஆசைக்கு இணங்க மறுத்த பெண் படுகொலை: தொழில் அதிபர் கைது

ஆள்நடமாட்டம் குறைவான இடத்தில் பெரிய பங்களா ஒன்றில் தொழில் அதிபர் வசித்து வந்தார்

பெங்களூரு

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் ஒசக்கோட்டை தாலுகா சூலிபெலே பகுதியை சேர்ந்தவர் தீபக் கிருஷ்ணா. தொழில் அதிபரான இவர் சூலிபெலே பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் குறைவான இடத்தில் பெரிய பங்களா ஒன்றில் வசித்து வந்தார். அவர் தனது வீட்டில் 2 விலையுயர்ந்த நாய்களை வளர்த்து வந்தார்.

இதனை கவனித்துக்கொள்ள கேரளம் மாநிலம் திருச்சூர் பகுதியில் வசிக்கும் ஆண்டனி என்பவரின் மனைவி ஸ்மிதா (வயது 47) என்ற பெண்ணை வேலைக்கு வைத்திருந்தார். மேலும் ஸ்மிதாவுடன் அவரது ஊரை சேர்ந்த அலினா என்ற பெண்ணும், சின்னு என்பவரும் வீட்டு வேலைக்கு வந்திருந்தனர்.

இந்தநிலையில் கடந்த 3-ந் தேதி ஸ்மிதா நாய்களுக்கு உணவு வைத்துக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில் அவரை கவனித்த தீபக் கிருஷ்ணா, ஸ்மிதாவை வீட்டுக்குள் அழைத்துள்ளார். பின்னர் ஸ்மிதாவை, தீபக் கிருஷ்ணா தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி உள்ளார். மேலும் அவரை பாலியல் பலாத்காரம் செய்யவும் முயன்றதாக கூறப்படுகிறது.

ஆனால் ஸ்மிதா அதற்கு சம்மதிக்காமல், அங்கிருந்து தப்ப முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த தீபக் கிருஷ்ணா வீட்டில் இருந்த உருட்டு கட்டையை கொண்டு ஸ்மிதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலை தடுக்க வந்த அலினா மற்றும் சின்னுவையும் அவர் மிரட்டி உள்ளார். இங்கு நடந்ததை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

பின்னர் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஸ்மிதாவை மீட்ட அலினா மற்றும் சின்னு ஆகியோர் சிகிச் சைக்காக சூலிபெலேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக ஸ்மிதா, கேரளம் மாநிலத்தில் உள்ள ஜூபிலி மிஷன் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஸ்மிதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்மிதாவின் கணவர் ஆண்டனி திருச்சூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த வழக்கை சூலிபெலே போலீஸ் நிலையத்துக்கு மாற்றினர். அதைத்தொடர்ந்து சூலிபெலே போலீசார் தீபக் கிருஷ்ணாவை கைது செய்தனர்.

மேலும் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் மதுபான விடுதி ஒன்றில் தகராறு செய்து, துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு சிறைக்கு சென்றார் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. அதையடுத்து போலீசார், தீபக் கிருஷ்ணாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.