தேசிய செய்திகள்

மனைவியை பலவந்தம் செய்தால் கணவனை தண்டிக்கலாமா..? - சுப்ரீம்கோர்ட்டு கேள்வி

திருமண உறவில் பலாத்காரம் தொடர்பான வழக்கில், பல்வேறு சட்டக் கேள்விகளை சுப்ரீம்கோர்ட்டு எழுப்பியுள்ளது.

புதுடெல்லி,

ஒரு கணவன் தன் மனைவியை பலவந்தமாக பாலியல் உறவுக்கு உட்படுத்தினால், அது குற்றம் அல்ல என சட்டம் கூறும் நிலையில், அதே சட்டப்பிரிவின் அடிப்படையில் ஒரு கணவனை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக விசாரிக்க முடியுமா என சுப்ரீம்கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஒரு செயல் குற்றம் அல்ல என சட்டம் தெளிவாகக் கூறியிருக்கும்போது, அதே செயலுக்காக ஒரு நபரை பிற்காலத்தில் குற்றவாளியாகக் கருதி தண்டிக்க முடியாது என அரசியல மைப்புச்சட்டப்பிரிவு 20(1) ஐ சுட்டிக்காட்டி அமர்வு முக்கியமான கேள்வியை எழுப்பியது.

திருமண உறவில் பலாத்காரம் தொடர்பாக தன்னை விசாரிக்க கர்நாடக ஐகோர்ட்டு அனுமதி அளித்ததை எதிர்த்து ஒரு கணவன் தொடர்ந்த வழக்கையும் சுப்ரீம்கோர்ட்டு அமர்வு சுட்டிக்காட்டியது. இந்த வழக்கின் அடிப்படையில் பல்வேறு சட்டக் கேள்விகளையும் நீதிமன்றம் எழுப்பியுள்ளது.

இந்திய தண்டனைச் சடடத்தின் 375வது பிரிவின் 2வது விதிவிலக்கின்படி. ஒரு ஆண் தனது சொந்த மனைவியுடன் மேற்கொள்ளும் பாலியல் உறவு அல்லது பாலியல் செயல்கள், அந்த மனைவிக்கு 15 வயதுக்கு மேல் இருக்கும் பட்சத்தில் பலாத்காரமாகக் கருதப்படாது என கூறப்பட்டிருந்தது.

எனினும், 2017ம் ஆண்டு சுப்ரீம்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் மூலம் மனைவியின் வயது வரம்பு 18 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது அமலில் உள்ள பாரதிய நியாய சன்ஹிதாவின் 63(2)வது பிரிவிலும் இதே போன்ற விதிவிலக்கு தொடர்கிறது.

இந்தவிதிவிலக்குக்கு எதிராக பல்வேறு மனுக்கள் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது, மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், வி.எஸ்.நப்பினை, கருணா நந்தி, ஜெய்னா கோத்தாரி உள்ளிட்டோர், கணவன், மனைவி இடையேயான பாலியல் உறவுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விதிவிலக்கு ரத்து செய்யப்படவேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது இந்திராஜெய் சிங், 375வது பிரிவின் கீழ் விதிவிலக்கு வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் செல்லுபடித்தன்மையை பரிசீலிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆக்கபூர்வமான விளக்கத்தின் மூலம் பெண்களை மணவாழ்வின் பலாத்காரத்திலிருந்து பாதுகாக்க முடியும் என வாதிட்டார்.

இதற்கு மாறாக, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரம் மிகவும் சிக்கலானது என்பதால், இதுகுறித்த முடிவை நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கே விட்டுவிட வேண்டும் என வாதிட்டார்.

பாலியல்உறவு இயற்கையானதா, இயற்கைக்கு மாறானதா என்பதை தீர்மானிக்கும் பணியை நீதிமன்றங்களே ஏற்றுக்கொள்வது அபத்தமானது என்றும், இதுபோன்ற விவகாரங்கள் மக்கள், அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் சட்டமன்றத்தின் பரிசீலனைக்கு விடப்படவேண்டும் என்று துஷார் மேத்தா தெரிவித்தார்.

மத்திய அரசின் இந்த வாதத்தை கருத்தில் கொண்ட சுப்ரீம்கோர்ட்டு அமர்வு, இது ஒரு குறிப்பிட்ட வகுப்பினரைப் பற்றிய கேள்வி அல்ல, குற்றம் தொடர்பாக ஒரு தனி நபரை எவ்வாறு அணுகுவது என்பதுதான் முக்கியமான கேள்வி என்று தெரிவித்தது.

மேலும், 'அரசியலமைப்பை தனித்தனி கூறுகளாகப் பிரித்துப் பார்க்க முடியாது. சட்டப்பிரிவு 21-ன் கீழ் வழங்கப்படும் உரிமைகளை பரிசீலிக்கும்போது, சட்டப் பிரிவு 20-ஐயும் சமமாக கருத்தில் கொள்ள வேண்டும். குற்றவியல் சட்டங்களை ஆய்வு செய்யும்போது குற்ற எண்ணம். பொறுப்புணர்வு மற்றும் அரசியலமைப்பை நாம் எவ்வாறு விளக்குகிறோம் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சிகளை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியும்" என சுப்ரீம்கோர்ட்டு அமர்வு கருத்து தெரிவித்தது.

மீண்டும் விசாரணை

மேலும், இந்தச் சட்டத்தில் ஏதேனும் பிரச்சினை இருப்பதாக அரசுக்கு தோன்றினால், நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் சட்டத்தை மீண்டும் வடிவமைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட்டு சுட்டிக்காட்டியது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

SCROLL FOR NEXT