கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

குளிர் பிரதேசங்களில் தான் விளையுமா? ஆப்பிளை வறண்ட பகுதியில் விளைவித்து ஆந்திர விவசாயி சாதனை

வறண்ட பகுதியிலும் ஆப்பிள் சாகுபடி செய்ய முடியும் என்பதை ஆந்திர விவசாயி நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

அமராவதி,

இந்தியாவில் ஜம்மு - காஷ்மீர், இமாச்சல பிரதேசம் போன்ற குளிர்ச்சியான மலை பிரதேசங்களில் ஆப்பிள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வறண்ட பகுதிகளில் இது சாத்தியம் இல்லை என்பதால், எப்போதும் ஆப்பிள் பழத்திற்கு மவுசு அதிகம். ஆனால், வறண்ட பகுதியிலும் ஆப்பிள் சாகுபடி செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார், ஆந்திர விவசாயி ஒருவர்.

அம்மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் கோட்டங்கா பகுதியை சேர்ந்தவர் ரமண ரெட்டி. விவசாயியான இவர், உலக அளவில் விவசாயத்தில் முன்னோடியாக திகழும் இஸ்ரேல் நாட்டில் இருந்து, ஆப்பிள் செடிக்கான கன்றுகளை தலா ரூ.250 விலையில் 1,500 எண்ணிக்கையில் வாங்கினார்.

கே.எல்.டி. என்ற நவீன ரகமான இந்த ஆப்பிள் கன்றுகளை, தனது 2.5 ஏக்கர் விவசாய நிலத்தில் ரமண ரெட்டி நட்டுவித்து, நீர் பாய்ச்சி பராமரித்தார். இதற்காக, அவர் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் தொகையை செலவிட்டார். வறண்ட வானிலையை தாங்கி வளரும் தன்மை கொண்ட இந்த ஆப்பிள் மரக்கன்றுகள் நன்கு வளர்ந்தன. குளிர்ச்சியான மலை பிரதேசங்களில் வளரும் ஆப்பிள் மரங்கள் காய்ப்பதற்கு 7 முதல் 8 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால், இந்த நவீன ரக ஆப்பிள் மரங்கள் 2 ஆண்டுகளிலேயே காய்க்க தொடங்கி விடுகின்றன.

தற்போது, 1 டன் (ஆயிரம் கிலோ) ஆப்பிள் பழங்களை அறுவடை செய்து விவசாயி ரமண ரெட்டி சாதனை படைத்துள்ளார். ஒரு கிலோ ஆப்பிள் ரூ.120 முதல் ரூ.170 வரை விலை போகிறது. தற்போது, ஆந்திராவில் ராயலசீமா பகுதியிலும் ஆப்பிள் செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. ஆந்திர மாநில தோட்டக்கலைத்துறை அதிகாரிகளும் இதை ஊக்குவிப்பதால், தற்போது, 15 ஏக்கர் பரப்பளவில் ஆப்பிள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வறட்சி மிகுந்த ராயலசீமா பகுதியில் ஆப்பிள் செடிகளுக்கு அதிக நீர் தேவைப்படுவதால், சொட்டு நீர் பாசனம் அவசியம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழக தோட்டக்கலைத் துறை அதிகாரிகளும் இதை நேரில் சென்று ஆய்வு செய்து, தமிழகத்திலும் ஆப்பிள் சாகுபடியை தொடங்க வேண்டும் என்பதே இங்குள்ள விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.