விபத்துக்குள்ளான கார் 
தேசிய செய்திகள்

ஆந்திராவில் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதி விபத்து: பெண் பலி; 5 பேர் காயம்

ஓட்டுநரின் தூக்க கலக்கம் அல்லது கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமராவதி,

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய பயங்கர விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அதே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

திருப்பதி தரிசனம்

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர், ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். தரிசனத்தை முடித்துக் கொண்டு, இன்று (வியாழக்கிழமை) அதிகாலை கார் மூலம் தங்களது சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஊருக்கு திரும்பியபோது சோகம்

அவர்களின் கார் சித்தூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வந்துகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தின் தாக்கத்தால் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது.

ஒருவர் பலி

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பெண் ஒருவர், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். ஓட்டுநர் உட்பட காரில் இருந்த மேலும் 5 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சித்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் விசாரணை

விபத்தில் பலியான பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது. அதிகாலை வேளையில் ஓட்டுநரின் தூக்க கலக்கம் அல்லது கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்குள்ளான காரின் பதிவு எண்ணைக் கொண்டு, கிருஷ்ணகிரி போலீசார் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களின் முழு விபரங்களைச் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT