பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெய்த கனமழை காரணமாக பனத்தூர் ரெயில்வே சுரங்கப்பாதை பகுதியில் தேங்கிய வெள்ளநீரில், கார் ஒன்று படகு போல மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காரில் சிக்கியிருந்தவர்களை பொதுமக்கள் துணிச்சலுடன் மீட்டனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் முக்கிய ஐ.டி காரிடார் பகுதிகளை இணைக்கும் பனத்தூர் ரெயில்வே சுரங்கப்பாதையில், நேற்று (வெள்ளிக்கிழமை) பெய்த திடீர் கனமழையால் பல அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. அப்போது அந்த வழியாக வந்த வெள்ளை நிற செடான் கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக வெள்ளநீரின் நடுவே சிக்கிக் கொண்டது.
நீரின் வேகம் மற்றும் அளவு வினாடிக்கு வினாடி அதிகரித்ததால், கார் மெல்ல மெல்ல தண்ணீரில் மிதக்கத் தொடங்கியது. காரின் ஜன்னல் உயரம் வரை தண்ணீர் சூழ்ந்ததால், உள்ளே இருந்த பயணிகள் காரை இயக்க முடியாமலும், வெளியே வர முடியாமலும் உள்ளேயே சிக்கி உயிருக்காகப் போராடினர்.
இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் வெள்ளநீரையும் பொருட்படுத்தாமல் காருக்கு அருகில் சென்று, காரின் கதவுகளைத் திறந்து உள்ளே இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். பின்னர், மிதந்து கொண்டிருந்த காரை தள்ளிச் சென்று பாதுகாப்பான மேடான பகுதியில் நிறுத்தினர். பொதுமக்களின் இந்த சமயோசித செயலால் காரில் இருந்தவர்கள் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஒயிட்பீல்டு, வர்த்தூர் போன்ற முக்கியப் பகுதிகளை இணைக்கும் இந்த சுரங்கப்பாதையில், ஒவ்வொரு மழையின் போதும் இது போன்ற விபத்துகள் தொடர்கதையாகி வருவதாகவும், மாநகராட்சி நிர்வாகம் இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் ஐ.டி ஊழியர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.