தேசிய செய்திகள்

வர்த்தக உரிமம் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட நகராட்சி ஊழியர் மீது வழக்கு

நகராட்சி ஊழியரின் உரையாடலை தனது செல்போனில் வீடியோ மற்றும் ஆடியோவாக அந்த நபர் பதிவு செய்தார்.

புதுச்சேரி,

வர்த்தக உரிமம் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட புதுச்சேரி நகராட்சி ஊழியர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வர்த்தக உரிமம்

கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்தின் புதுவை கிளைக்கு வர்த்தக உரிமம் பெற அந்த நிறுவனத்தின் மேலாளர் ரஞ்சித் கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி புதுச்சேரி நகராட்சியில் விண்ணப்பித்தார்.

புதுவை நகராட்சியின் வருவாய் அதிகாரி 2-ம் பிரிவு அலுவலகத்தில் பணிபுரியும் பில் கலெக்டர் அலெக்சாண்டர் வர்த்தக உரிமம் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதை முதலில் வழங்கினால் தான், நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய 3 ஆண்டு உரிம கட்டணமான ரூ.15 ஆயிரம் செலுத்த முடியும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வழக்குப்பதிவு

இதனால் அதிர்ச்சியடைந்த ரஞ்சித், புதுச்சேரி நகராட்சி ஊழியரின் உரையாடலை தனது செல்போனில் வீடியோ மற்றும் ஆடியோவாக பதிவு செய்தார்.

இதனை ஆதாரமாக வைத்து புதுவை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT