கேரளாவில் நீதிபதியின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற சொகுசு கார் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், காரின் உரிமையாளரான நீதிபதி மீது மோட்டார் வாகனச் சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திய 17-வயது மகனுக்கு இரண்டு மணி நேரத்தில் கோர்ட் ஜாமீன் வழங்கியது.
கேரள மாநிலம் கொச்சி அருகே சேரனல்லூரில் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிள் மீது சொகுசு கார் ஒன்று மோதியது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற பாலகிருஷ்னன் என்ற நபர் உயிரிழந்தார். விசாரணையில் காரை ஓட்டி வந்தது, கூடுதல் மாவட்ட நீதிபதியின் 17 வயது மகன் என்பது தெரியவந்தது. தனது தந்தையின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து, சிறுவனின் தந்தையும், காரின் உரிமையாளருமான கூடுதல் மாவட்ட நீதிபதி மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் 199-ஏ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின்கீழ் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் மற்றும் வாகனப் பதிவை 12 மாதங்கள் வரை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க சட்டம் வழிவகை செய்கிறது.
விபத்து தொடர்பாக முதலில் கைது செய்யப்பட்ட சிறுவன், சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு முந்தைய குற்றப் பின்னணி இல்லாததைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்பட்டது. 2 மணி நேரத்தில் சிறுவன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த உயிரிழந்தவரின் குடும்பத்தினர், போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சிறுவன் மீண்டும் காவலில் எடுத்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் கேரள ஐகோர்ட்டின் அனுமதியைக் கோரினர். இதையடுத்து, நீதிபதி மீது ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. இந்தச் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.