மெட்ரோ நிலையத்தில் பூனை அதிகாரி 
தேசிய செய்திகள்

மும்பை மெட்ரோ நிலையத்தை காவல் காத்த பூனைக்கு அதிகாரப்பூர்வ பதவி; வைரலாகும் அறிவிப்பு

நிலையத்தை ஆய்வு செய்வது, பயணிகளை கண்காணிப்பது போன்ற பொறுப்புகள் அளிக்கப்படுகிறது

குண்டவாலி

மும்பை மெட்ரோவின் 7-வது வழிதடத்தில் குண்டவாலி மெட்ரோ நிலைய நுழைவாயிலில் மாதக்கணக்காக சுற்றித் திரியும் பூனைக்கு சிஎப்ஓ என்ற கவுரவப் பதவியை மும்பை மெட்ரோ வழங்கியுள்ளது.

பயணிகளை கவர்ந்தது

மெட்ரோ நிலைய நுழைவாயிலில் அமைதியாக அமர்ந்திருக்கும் இந்தப் பூனை, பயணம் செய்யும் பலருக்கும் மனஅமைதியை தரும் ஒரு பழக்கமான முகமாக மாறியுள்ளது. அதன் அமைதியான தோற்றம் காரணமாக, பல பயணிகள் அதை ரசித்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பயணியின் பதிவு

அதில் ஒரு பயணியான சந்தேஷ் சாமந்த் என்பவர் இந்த பூனையை படம் பிடித்தார். பின்பு தனது எக்ஸ் தளம் மூலம் மும்பை மெட்ரோ நிறுவனத்திற்கு "இந்த அன்பான உயிருக்கு ஒரு அதிகாரப்பூர்வ பதவியை வழங்குங்கள்.

தற்போது இது எந்த ஊதியமும் இன்றிப் பணியாற்றிக் கொண்டிருக்கிறது." என்று செய்தி அனுப்பியுள்ளார்.

மெட்ரோ பதிவு

அந்த செய்தியை ஏற்றுக்கொண்ட மும்பை மெட்ரோ நிறுவனம், பூனைக்கு (சிஎப்ஓ) “பூனைகளுக்கான தலைமை அதிகாரி” பதவி வழங்கப்படுகிறது என்றும் அதன் பணி, நிலையத்தை ஆய்வு செய்வது, பயணிகளை கண்காணிப்பது போன்ற பொறுப்புகள் அளிக்கப்படுகிறது என்று வேடிக்கையாக மறு பதில் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளது.

மெட்ரோ மூலம் நகைச்சுவையாக வழங்கப்பட்ட இந்த பதவி குறித்த செய்தி பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது மெட்ரோ அதிகாரியான அந்த பூனை பற்றி இணையத்தில் வைரலாக பேசபடுகிறது.