தேசிய செய்திகள்

காவிரி விவகாரம்; கர்நாடகாவில் முதல்-மந்திரி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடக்கம்

காவிரி படுகையில் இருக்கும் அணைகளில் உள்ள நீர் இருப்பு, காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு, மேகதாது அணை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

பெங்களூரு

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது.

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு பற்றாக்குறையாக பெய்துள்ளது. இதனால் காவிரி படுகையில் ஹாரங்கியை தவிர மற்ற 3 அணைகளும் நிரம்பாமல் உள்ளன. குறிப்பாக கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்) அணை நிரம்பவில்லை. இதன் காரணமாக தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடாமல் இருந்து வருகிறது.

நீர் திறக்க உத்தரவு

இதற்கிடையில், காவிரி ஒழுங்காற்று குழு, தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,500 கனஅடி நீர் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. அதாவது மொத்தம் 4% டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) நீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு விவசாயிகள், கன்னட அமைப்பினர் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அத்துடன் பெங்களூரு, மண்டியா, மைசூருவில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் நடந்து வருகின்றன.

அனைத்துக்கட்சி கூட்டம்

இந்த நிலையில், காவிரி நதிநீர் விவகாரம் குறித்து முடிவு எடுக்க அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி, பெங்களூரு விதானசவுதாவில் இன்று காலை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெறுகிறது.

இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்படி எதிர்க்கட்சிகளான பா.ஜ.க., ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்களுக்கும், காவிரி படுகை மாவட்டங்களில் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கும், விவசாயிகளுக்கும் கர்நாடக அரசு சார்பில் முறைப்படி அழைப்பு விடப்பட்டுள்ளது. இதுதவிர முன்னாள் முதல்-மந்திரிகள், சட்ட நிபுணர்களும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

நீர் வரத்து அதிகரிப்பு

இந்த கூட்டத்தில் தற்போது காவிரி படுகையில் இருக்கும் அணைகளில் உள்ள நீர் இருப்பு பற்றியும், காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. தற்போது குடகு, சிக்கமகளூரு மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. காவிரி படுகையில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணையும் நிரம்பும் நிலையில் இருக்கிறது.

இதனால் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி நீர் திறந்து விடுவதில் எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் மழை குறைந்தால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால், அதுபற்றி அனைத்துக்கட்சி தலைவர்களுடன் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளார்.

மேகதாது அணை

கர்நாடகாவுக்கு, தமிழக முதல்-அமைச்சர் விஜய் வர வேண்டாம் என கூறியிருந்த நிலையில், கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. கூட்டத்தில், மேகதாது அணை கட்டுவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.