புதுடெல்லி,
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் வருகிற 23-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.
காவிரி நதி நீர் பங்கீட்டில் கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளம் ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே சுமூக தீர்வு காண்பதற்காக சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்கப்பட்டன. இந்த 2 அமைப்புகளும் மாதம்தோறும் கூடி நீர் பங்கீட்டு பிரச்சினைகள் பற்றி ஆலோசிக்கின்றன.
அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில் இதுவரை 51 கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன. 52-வது கூட்டம் வருகிற 23-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியில் நடத்தப்படுகிறது. ஆணைய அலுவலகத்தில் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க மேற்கண்ட 4 மாநிலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கூட்டத்தில் அதிகாரிகள் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமோ கலந்து கொள்ளலாம்.
காவிரி நதி நீரைப் பொறுத்தவரை கர்நாடகம், தமிழகத்துக்கு உரிய பங்கை முறைப்படி வழங்குவதில்லை என்ற குற்றச் சாட்டு உள்ளது. ஒவ்வொரு மாதமும் இத்தனை டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தல்கள் உள்ளன. ஆனால் அதனை சரியாக வழங்காமல், மழைக்காலத் தில் உபரியாக திறக்கப்படும் நீரின் அளவை ஆண்டின் சராசரி தண்ணீரின் அளவோடு கர்நாடகம் கணக்கிடுவதாக தமிழ் நாடு அரசு தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது. ஆணையத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும் அதிகாரிகள் இதனை சொல்லி, மழைக்கால தண்ணீர் திறப்பை கணக்கில் சேர்க்கக்கூடாது என வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு எல்லாம் தயாராக வைக்கப்பட்டு இருக்கிறது. மத்திய நீர்வளத்துறை இதற்கு அனுமதி கொடுத்தால் அணை கட்டும் பணியை தொடங்கிவிடலாம் என கர்நாடகம் நினைக்கிறது.
இதற்கு தமிழ்நாடுஅரசு தரப்பில் கடுமையான எதிர்ப்புகள் முன் வைக்கப்பட்டு உள்ளன. சமீபத்தில் முதல்-அமைச்சர் விஜய் டெல்லி வந்திருந்தபோது பிரதமரிடம் இதனை வலியுறுத்தினார். இந்த நிலையில் தமிழக சட்டசபையில் மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து அவர் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அது நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் 23-ந்தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தில் மேகதாது அணை பற்றிய விவாதம் இருக்கலாம் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.