தேசிய செய்திகள்

டெல்லியில் நாளை காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 51-வது கூட்டம் நாளை காலை 11:30 மணிக்கு நடைபெறுகிறது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில், காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து கொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து உள்ளன.

தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன் 12-ம் தேதி காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் அதுகுறித்து ஆணையம் இதுவரை எந்த உத்தரவையும் வெளியிடவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 51-வது கூட்டம் நாளை காலை 11:30 மணிக்கு நடைபெறுகிறது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹெல்தர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், தமிழகத்திற்குத் தரப்பட வேண்டிய காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

கர்நாடகாவிடம் இருந்து தமிழகத்திற்கு மாதவாரியாகத் தரப்பட வேண்டிய நீர், காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் நிலவும் வானிலை மற்றும் மேகதாது அணை விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலப் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.