புதுடெல்லி,
காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மாதம் ஒருமுறை கூடி வருகிறது. அதன் துணை அமைப்பான காவிரி ஒழுங்காற்றுக்குழுவுக்கு மாதம் இத்தனை முறை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற விதி இல்லை. எப்போது வேண்டுமானாலும் அது கூடும். அந்த வகையில் நேற்று காணொலி மூலம் அந்த கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு அமைப்பின் தலைவர் நவீன்குமார் தலைமை தாங்கினார். இதில் 4 மாநில பிரதிநிதிகளும் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டனர். கூட்டத்தின் தொடக்கத்தில் நீரியல் புள்ளி விவரங்கள் அனைத்து மாநிலங்களிடமிருந்தும் பெறப்பட்டன.
பின்னர், அதிகாரப்பூர்வமில்லாத விவாதங்கள் நடைபெற்றன. காவிரி ஒழுங்காற்று குழுவுக்கு எந்த மாநிலத்தையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லாததால் கூட்டத்தில் பேசுவதை எதையும் பெரிதுபடுத்தாது.
இந்த நிலையில் நேற்றைய கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் தண்ணீர் திறக்க இயலாது என்றும், மழை பெய்தால் பார்த்துக்கொள்ளலாம் என்றும் கர்நாடக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீர் தங்களது குடிநீர் தேவைக்கு மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ள கர்நாடக அதிகாரிகள் 28-ந் தேதிக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். 28-ந் தேதி அடுத்த கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழக அதிகாரிகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் ஒழுங்காற்று குழுவால் இதில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்பதால் கூட்டம் சாதாரணமாக நடந்து முடிந்தது.