பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானின் சண்டிகர் முகாம் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். முதல்-மந்திரியின் சிறப்பு பணி அதிகாரி (ராஜ்பீர் சிங் குமான் மற்றும் அவரது கூட்டாளிகள் மீதான ஊழல் புகார் தொடர்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டு உத்தரவு மற்றும் அமலாக்கத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. அதிகாரிகளின் இடமாற்றம், பணி நியமனம், அரசு கொள்கை முடிவுகள், டெண்டர் விதிமுறைகள், உரிமங்கள், நிலப் பயன்பாட்டு மாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முதல் மந்திரியின் சிறப்பு பணி அதிகாரி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, முதல்-மந்திரியின் முகாம் அலுவலகம் உள்ளிட்ட 8 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். சண்டிகர், மொகாலி, குர்தாஸ்பூர், லூதியானா, பாட்டியாலா, சங்க்ரூர், ஜலந்தர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சோதனைகளில் ஆவணங்கள், செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சி.பி.ஐ. சோதனைக்கு முதல்-மந்திரி பகவந்த் மான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 2027-ம் ஆண்டு பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான பணிகளை பா.ஜ.க. தொடங்கிவிட்டதாகவும், மத்திய விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி தனது அரசை குறிவைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால், பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டு உத்தரவின்படியே சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருவதாகவும், அரசியல் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் பா.ஜ.க. தெரிவித்துள்ளது. இதற்கிடையே, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து பஞ்சாப் அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளது. இந்த மனுவை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புக்கொண்டுள்ளது