தேசிய செய்திகள்

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கும்: ராஜ்நாத் சிங் உறுதி

தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே கேரளம் வளர்ச்சிக்கு வழிவகுக்க முடியும் என ராஜ்நாத் சிங் கூறினார்.

எர்ணாகுளம்,

கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பரவூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட் டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கொடூர ஆட்சியை நடத்தி வருகிறது. அதற்கு உதாரணம், தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக உள்ள சதானந்தன் மாஸ்டரின் 2 கால்களை அவர்கள் ஏற்கனவே வெட்டி உள்ளனர். அவர்கள் மனிதர்களை மட்டுமல்ல, விலங்குகளையும் வேட்டையாடி வருகின்றனர். ஆட்சி, பதவி, அதிகாரம் ஆகியவற்றிற்காக கொடூர செயல்களில் ஈடுபடும் கட்சியாக கம்யூனிஸ்டு கட்சி விளங்குகிறது.

மேலும் எஸ்.டி.பி.ஐ., ஜமாத் இ இஸ்லாமி ஆகிய அமைப்புகளின் பிடியில் இருந்து கேரளத்தை காப்பாற்ற தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே முடியும். இடது முன்னணி ஆட்சியில் சுவாமி, மனிதர்கள் என யாருக்குமே பாதுகாப்பில்லை. கேரளம் அனைத்து துறைகளிலும் வளர வேண்டும். விவசா யம், கல்வி, வேலைவாய்ப்பு. சுகாதாரம், சிறு, குறு தொழில் கள் வளர்ச்சி அடைய வேண்டும். அவ்வாறு நடைபெற வேண்டுமென்றால், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமர வேண்டும்.

திருச்சூரில் அதற்கான வழி திறக்கப்பட்டது. அதுபோல சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற் றால் மட்டுமே, கேரளம் வளர்ச்சிக்கு வழிவகுக்க முடியும். சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு குறித்து நிச்சயமாக சி.பி.ஐ. மூலம் விசாரிக்கப்படும். தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.