புதுடெல்லி,
மத்திய அரசு 2020-ம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை அறிவித்தது. அதன்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மும்மொழி பாடம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அந்த திட்டம் இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்பட்டது. அதாவது முதலில் 6-ம் வகுப்பில் இருந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது இருமொழித் திட்டத்தின் கீழ் உள்ளூர் மாநில மொழி மற்றும் ஆங்கிலம் உள்ளன. இனி 3-வது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே கடந்த மே 15-ம்தேதி சி.பி.எஸ்.இ. புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் இந்த ஆண்டில் இருந்தே 6-ம் வகுப்பிலும், 9-ம் வகுப்பிலும் மும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.
9-ம் வகுப்பில் இந்த ஆண்டே மும்மொழித் திட்டத்தை செயல்படுத்த கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே 3 மொழிகள் கற்பிக்கப்படும். அடுத்த ஆண்டு முதல் 7-ம் வகுப்பில் இருந்து படிப்படியாக 3-வது மொழியை மாணவர்கள் பயில்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பாடத்திட்டத்தின்கீழ் நடக்கக்கூடிய ஒரு சில பள்ளிகளில் தற்போது 8-ம் வகுப்பு வரை மும்மொழித் திட்டம் உள்ளது. 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் இரு மொழி மட்டுமே உள்ளது. 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் ஒரு மொழித் திட்டத்தின்கீழ் பாடங்கள் நடத்தப்படுகின்றன. பெரும்பாலும் ஆங்கில வழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.
இனி 12-ம் வகுப்பு வரை மும்மொழித் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. தொடர்ந்து நிராகரித்து வருகிறது. 3-வது மொழி என்ற பெயரில் இந்தியை மறைமுகமாக திணிக்கும் முயற்சி என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.