கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி - ஜூன் 1-ந் தேதி தொடக்கம்

தவறான தகவல்களை வழங்கினால் ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி யூனியன்பிரதேச கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டின் முதல் கட்டமாக வீட்டு பட்டியல் மற்றும் வீட்டு கணக்கெடுப்பு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அட்டவணைப்படி நடைபெறும். பொதுமக்கள் தாங்களே அரசு அறிவித்துள்ள இணையதளத்தின் மூலம் தகவல்களை பதிவுசெய்யும் சுய கணக்கெடுப்பு வருகிற மே 17-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெறும்.

கணக்கெடுப்பு அலுவலர்கள் வீடுதோறும் சென்று தகவல்களை சேகரிக்கும் பணி ஜூன் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை மேற்கொள்ளப்படும். இந்த கணக்கெடுப்பின்போது வீட்டு அமைப்பு, குடிநீர் வசதி, கழிப்பறை, சமையல் எரிபொருள், மின்சாரம் மற்றும் இணைய வசதி உள்ளிட்ட மொத்தம் 33 விவரங்கள் சேகரிக்கப்படும்.

1948 மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டப்படி, பொதுமக்கள் சில முக்கிய சட்டப்பூர்வ கடமைகளை கடைபிடிக்க வேண்டும். கணக்கெடுப்பு அலுவலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான மற்றும் துல்லியமான பதில்களை வழங்குவது கட்டாயமாகும். வீடுகளில் கணக்கெடுப்பு அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.

கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் அனைத்து விவரங்களும் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும். இந்த தகவல்கள் வழக்குகளில் சான்றாகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்பது உறுதியாக அறிவிக்கப்படுகிறது. கணக்கெடுப்பு பணிகளில் ஒத்துழைக்காமல் இருப்பது, தவறான தகவல்கள் வழங்குவது அல்லது அலுவலர்களுக்கு அனுமதி மறுப்பது போன்ற செயல்கள் சட்டப்படி குற்றமாகும். இத்தகைய விதிமீறல்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.