புதுடெல்லி,
காப்பீட்டுத் துறையில் நேரடி அன்னிய முதலீட்டு வரம்பானது முன்பு 74 சதவீதம் என்று இருந்தது. இதனை தானியங்கி வழி முறை வாயிலாக 100 சதவீதமாக உயர்த்த வழிவகுக்கும் வகையில், 'சப்கா பீமா சப்கி ரக்சா' என்ற காப்பீட்டுச் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் இந்த மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்பட்டு, சட்டமாக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அதனை நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடந்த பிப்ரவரி மாதம் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 'தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை இதற்கான அறிக்கையை வெளியிட்டது. காப்பீட்டுத் துறையில் 100 சதவீத நேரடி அன்னிய முதலீட்டுக்கு அது வழிவகுத்தது.
இந்தநிலையில் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை இதனை முறைப்படி அறிவித்தது. இந்த அறிவிப்பில் காப்பீட்டு நிறுவனங்கள், காப்பீட்டு தரகர் கள், காப்பீட்டு ஆலோசகர்கள், பெருநிறுவன முகவர்கள், தரப்பு ஒருங்கிணைப்பாளர், குத்தகைதாரர் மற்றும் இழப்பு காப்பீட்டாளர்கள், மேலாண்மை பொது முகவர்கள்,
காப்பீட்டு களஞ்சியங்கள் மற்றும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் அவ்வப்போது அங்கீகரிக்கப் படக்கூடிய இதுபோன்ற பிற நிறுவனங்களில் 100 சதவீத நேரடி அந்நிய முதலீடு தானியங்கி வழிமுறை வாயிலாக அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் காப்பீட்டு நிறுவனங்களை தொடங்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள நிறுவனங்களை வாங்கலாம். காப்பீடுதாரர்களுக்கு உடனடி பலன் கிடைக்காது என்றாலும் அடுத்த சில ஆண்டுகளில் 15 சதவீதம் வரை காப்பீட்டு பிரீமியங்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் தொலைதொடர்பு சேவை மற்றும் வங்கி துறையைப் போலவே மிகப்பெரிய மாற்றத்தை காப்பீடு துறையிலும் கொண்டுவரும் என அரசு நம்புகிறது.
அதேநேரத்தில், இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்துக்கு (எல்.ஐ.சி.) மட்டும் இந்த வரம்பு 20 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று அன்னிய செலாவணி மேலாண்மை (கடன் சாரா ஆவணங்கள்) 2-வது திருத்தம் விதிகள்-2026 குறிப்பிடுகின்றன.