தேசிய செய்திகள்

உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் 16 வகை கூட்டு மருந்துகளுக்கு மத்திய அரசு தடை

தடை செய்யப்பட்ட கூட்டு மருந்துகள் பட்டியலில் பல்வேறு தோல் மருத்துவ மற்றும் சரும பராமரிப்பு கலவைகளும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

மருத்துவத்துறையில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளை குறிப்பிட்ட விகிதத்தில் சேர்த்து தயாரிக்கப்படும் மருந்துகள் நிலையான அளவு கூட்டு மருந்துகள் (மருந்து கலவைகள்) என அழைக்கப்படுகின்றன. இந்த கூட்டு மருந்துகளின் பயன்பாடு மற்றும் திறன் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யுமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி மத்திய மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் இதற்காக சிறப்பு நிபுணர் குழுவை அமைத்தது.இந்த குழுவினர் மேற்படி மருந்து கலவைகளை ஆய்வு செய்தது. அப்போது அவற்றில் சில வகை மருந்துகள் பயன்பாட்டுக்கு முரணாக, உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தயாரிப்பு, விற்பனைக்கு தடை

இதைத்தொடர்ந்து 16 வகையான கூட்டு மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த மருந்துகளை தயாரித்தல், விற்பனை, வினியோகம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாக கூறியுள்ள சுகாதார அமைச்சகம், பயனுள்ள மற்றும் அறிவியல் பூர்வமாகச் சரிபார்க்கப்பட்ட மருந்துகள் மட்டுமே பொதுமக்களுக்குக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.இந்த கூட்டு மருந்துகள் சிகிச்சைக்கான நியாயப்படுத்தலைக் கொண்டிருக்கவில்லை என்றும், அவற்றில் உள்ள அபாயங்களைக் கருத்தில் கொண்டு பயனுள்ளதாகக் கருதப்படவில்லை என்றும் கண்டறியப்பட்டிருப்பதாகவும் அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

வலி நிவாரணிகள்

தடை செய்யப்பட்ட இந்த மருந்துக் கலவைகளில், தோல் மருத்துவத் தயாரிப்புகள், வலிநிவாரணிகள் மற்றும் தசைத் தளர்வு மருந்துகள், மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி அடிப்படையிலான கலவைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.தடை செய்யப்பட்டுள்ள மருந்துகளில் அசிட்டைல் சாலிசிலிக் அமிலத்துடன் கூடிய எத்தோஹெப்டசைன் கலவை, டைசைக்ளாமைன்-பாராசிட்டமால்-சிலிடினியம் புரோமைடு கலவை, டைசைக்ளோமைன்-பாராசிட்டமால்-சிலிடினியம் புரோமைடு-குளோர்டியாசெபாக்சைடு கலவை, குரோமியம் பிக்கோலினேட்-கிளைக்லாசைடு கலவை மற்றும் பாராசிட்டமால்-லிக்னோகைன் போன்ற கூட்டு மருந்துகள் முக்கியமானவை ஆகும். மேலும் பல்வேறு ஆன்டிபயாடிக் அடிப்படையிலான கலவைகளும் தடை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் அமாக்சிலின்-செராட்டியோபெப்டிடேஸ், அமாக்சிலின்-செராட்டியோபெப்டிடேஸ்-லாக்டோபேசிலஸ் ஸ்போரோஜென்ஸ், அமாக்சிலின்-குளோக்சாசிலின், லாக்டிக் அமிலம் பேசில்லஸ்-செராட்டியோபெப்டிடேஸ் போன்றவை முக்கியமானவை ஆகும்.

தோல் மருத்துவ தயாரிப்புகள்

தடை செய்யப்பட்ட கூட்டு மருந்துகள் பட்டியலில் பல்வேறு தோல் மருத்துவ மற்றும் சரும பராமரிப்பு கலவைகளும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.குறிப்பாக வைட்டமின் இ, ஜோஜோபா எண்ணெய், ஆரஞ்சு எண்ணெய், கோதுமை முளை எண்ணெய், டீ ட்ரீ எண்ணெய், அலன்டோயின் மற்றும் டி-பாந்தெனோல் போன்ற மூலப்பொருட்களுடன் கூடிய கற்றாழை அல்லது கற்றாழைச் சாறு போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. அரசின் இந்த அறிவிப்பை அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்கள், ஒழுங்குமுறை ஆணையங்கள் மற்றும் அமலாக்க முகமைகள் கடுமையாகச் செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.