புதுடெல்லி,
'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் இந்தியாவையே உலுக்கி வருகிறது. மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாடாளுமன்றத்தை நோக்கி கடந்த 20-ந்தேதி நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் மாணவர்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காயம் அடைந்தனர். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் இன்று 35-வது நாளை எட்டியுள்ளது. இந்த போராட்டத்துக்கு பல தலைவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். கனிமொழி தலைமையிலான தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று முன்தினம் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செய லாளர் டி.ராஜா, பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நேற்று ஆதரவு தெரிவித்தனர். வினாத்தாள் கசிவுகளில் ஈடுபட்டவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக விரைவு கோர்ட்டு அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்து இருக்கிறார்.
இதற்கிடையே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கும் மத்திய அரசுக்கும் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. டெல்லியில் உள்ள அரசியலமைப்பு மன்றத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மத்திய அரசு சார்பில் அமைச்சர்கள் ஜேபி நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் பங்கேற்றுள்ளனர்