புதுடெல்லி,
டெல்லியில் 24, அக்பர் ரோடு' (லூதியன் பகுதி) என்பது காங்கிரஸ்காரர்களுக்கு மறக்க முடியாத ஒரு இடம் ஆகும். இங்குதான் 1978-ம் ஆண்டு முதல் அகில இந்திய காங்கிரஸ் அலுவலகம் செயல்பட்டு வந்தது.அதற்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் அலுவலகம் ஜந்தர் மந்தர் ரோட் டில் இருந்தது.
நெருக்கடி நிலை பிரகடனத்தை தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இந்திராகாந்தி, அக்பர் ரோட்டில் புதிய அலுவலகத்தை தொடங்கினார். அப்போது இருந்து தற்போது வரை அது காங்கிரஸ் அலுவலகமாக இருக்கிறது.
இதற்கிடையே, கோட்லா ரோட்டில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் காங்கிரஸ் கட்சி புதிய அலுவலகம் கட்டி கடந்த ஆண்டு திறந்தது. இருந்த போதிலும், அக்பர் ரோட்டில் உள்ள அலுவலகத்தையும், ரெய்சினா ரோட்டில் உள்ள இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தையும் அந்த கட்சி தற்போது வரை பயன்படுத்தி வருகிறது.
இந்தநிலையில் இந்த அலுவலகங்கள் செயல்படும் 2 இல்லங்களையும் வருகிற 28-ந் தேதிக்குள் காலி செய்ய மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் தோட்டத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.