புதுடெல்லி,
முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பில் ஈடுபடும் 'பிளாக் கேட்' எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை (என்.எஸ்.ஜி.) கமாண்டோக்களுக்கு கோடைகாலம் மற்றும் குளிர்காலத்துக்கு ஏற்ற வகையில் இலகுரக புதிய சீருடைகளை வழங்க படை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.கடந்த ஏப்ரல் மாதம் ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் 44 டிகிரி செல்சியஸ் வெயிலில், முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கமாண்டோ ஒருவர் வியர்வையில் மயங்கி விழுந்தார்.
கருப்பு நிறச் சீருடை அதிக வெப்பத்தை ஈர்ப்பதாலும், சுமார் 6 கிலோ எடை கொண்ட குண்டுதுளைக்காத உடைகள், ஆயுதங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களை நீண்ட நேரம் அணிந்திருப்பதாலும் கமாண்டோக்கள் உடல்நலக் குறைவுக்கு ஆளாவது தெரியவந்தது. இதையடுத்து, நைலான் மற்றும் பருத்தி கலந்த 'நைக்கோ' எனப்படும் சிறப்புத் துணியிலான புதிய சீருடைகளை அறிமுகப்படுத்த என்.எஸ்.ஜி. திட்டமிட்டுள்ளது. காற்று எளிதில் புகுந்து செல்லக்கூடிய இந்தத் துணி, அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் கொண்ட சூழலிலும் கமாண்டோக்களுக்கு வசதியாக இருக்கும்.
சி.ஆர்.பி.எப். அமைப்பின் 'கோப்ரா' சிறப்புப் படையினர் ஏற்கனவே இந்த வகை உடைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளன. தேர்தல் பிரசாரங்களின்போது அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கமாண்டோக்கள் சிரமமின்றி செயல்படுவதற்கு இந்தப் புதிய சீருடைகள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.