தேசிய செய்திகள்

கார்போசல்பான் பூச்சிக்கொல்லி மருந்துக்கு தடை விதிக்க மத்திய அரசு பரிந்துரை!

கார்போசல்பான் பயன்படுத்துவதால் மனிதர்கள் மற்றும் பறவைகளுக்கு அதன் நச்சுத்தன்மையால் கடுமையான அளவில் பாதிப்பு ஏற்படுகிறது.

புதுடெல்லி,

கார்போசல்பான் பூச்சிக்கொல்லி மருந்துக்கு தடை விதிக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்த மருந்தினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

கார்போசல்பான் பயன்பாடு ரத்து

மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அரசிதழ் அறிவிப்பின்படி கார்போசல்பானின் இறக்குமதி, உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகிய அனைத்தும் முற்றிலும் தடை செய்ய வேண்டும் என அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. பூச்சிக்கொல்லி சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 'பதிவுக் குழு' கார்போசல்பானின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட அனைத்து பதிவு சான்றிதழ்களையும் திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளது. சான்றிதழ் கையில் வைத்திருப்பவர்கள் 3 மாதத்திற்குள் அதனை ஒப்படைக்க வேண்டும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தடையை நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்த தேவையான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மத்திய அரசுகள் மாநில அரசுகளிடம் கூறியுள்ளது.

பிற உயிரினங்களுக்கு பாதிப்பு

நெற்பயிர்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் பூச்சிகளின் தொல்லையை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு கிடைத்த சில பயனுள்ள வழிகளில் கார்போசல்பானும் ஒன்று என்பதால், இதற்கு தகுந்த மாற்று மருந்துகளின் தேவை சந்தைகளில் அதிகரிக்கும். பதிவுக் குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கார்போசல்பான் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தேனீக்கள், பறவைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் போன்ற பிற உயிரினங்களுக்கும் நச்சுத்தன்மை மூலம் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது என மிக தெளிவாக தெரிவித்துள்ளது.