தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 8,750 சூதாட்ட இணையதளங்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின்போது சட்டவிரோத சூதாட்ட இணையதளங்கள், செயலிகள் மூலம் பலர் சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்:

இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின்போது சட்டவிரோத சூதாட்ட இணையதளங்கள், செயலிகள் மூலம் பலர் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் இறுதிப்போட்டி கடந்த 31-ம் தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்தது.

இந்த போட்டியிலும் பெரிய அளவில் சூதாட்டம் நடக்க இருப்பதாக சைபர் கிரைம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் கர்நாடக போலீசாரும், சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகளும் இணைந்து சூதாட்டம் நடப்பதை தடுக்க உன்னிப்பாக கண்காணித்து வந்தனர். அப்போது ஏராளமான சட்டவிரோத சூதாட்ட இணையதளங்கள் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

8,750 இணையதளங்கள் முடக்கம்:

அந்த இணையதளங்கள் மூலம் அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கப்பட்டு வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் ஐ.பி.எல். இறுதிப்போட்டியை குறிவைத்து நாடு முழுவதும் 8 ஆயிரத்து 750 சூதாட்ட இணையதளங்கள் செயல்படுவதாகவும், அவற்றை முடக்க வேண்டும் என்றும் கர்நாடக போலீசார், மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தனர். இந்த பரிந்துரையின்பேரில் நாடு முழுவதும் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 8 ஆயிரத்து 750 சூதாட்ட இணையதளங்களை முடக்கி மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.