புதுடெல்லி,
நாடு முழுவதும் 11 கோடி விவசாயி அடையாள அட்டைகளை உருவாக்கும் இலக்கை மத்திய அரசு எட்டியுள்ளதாக வேளாண் துறை மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 'அக்ரிஸ்டேக்' எனப்படும் வேளாண் தொழில்நுட்ப திட்டத்தின் கீழ், 11 கோடி விவசாயிகளுக்கு 11 இலக்க தனித்துவ அடையாள எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன என மத்திய வேளாண் துறை மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இலக்கு தேதிக்கு முன்னதாக இது எட்டப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், “டிஜிட்டல் வேளாண் இயக்கத்தின் ஒரு பகுதியாக, 'அக்ரிஸ்டேக்' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 11 இலக்க அடையாள எண்கள் கொண்ட அட்டைகள் வழங்கப்பட உள்ளன. கடந்த 23ம் தேதி 11 கோடி விவசாயிகளுக்கு அடையாள எண்கள் உருவாக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
வரும் 2027 மார்ச் மாதத்திற்குள், 11 கோடி விவசாயிகளுக்கு அடையாள எண்கள் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்திருந்தார். ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே இந்த பணி முடிவடைந்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
வங்கி கடன்கள், பயிர் காப்பீடு, பேரிடர் நிவாரண உதவிகள் பெறுவதற்கும், வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கும், உரம் உள்ளிட்ட இடுபொருட்களை வாங்குவதற்கும் எந்தவொரு ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை. இந்த அடையாள அட்டையில் உள்ள எண்ணை பயன்படுத்தி அரசின் சலுகைகளை பெறலாம்.