தேசிய செய்திகள்

தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம் ராய் புகாரை அரசு ஆய்வு செய்கிறது: ராஜ்நாத் சிங்

முகுல் ராய் கூறிய புகார் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு அடுத்த நிலை தலைவராக இருந்தவர் முகுல் ராய். சமீபத்தில் அவர் அக்கட்சியில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் தன்னை இணைத்து கொண்டார்.

இந்நிலையில், மேற்கு வங்காள அரசு தனது நடவடிக்கைகளை கண்காணித்தது என முகுல் ராய் குற்றம் சாட்டியுள்ளார். அவர் கடந்த மாதம் ராஜ்நாத் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில், எனது தொலைபேசி அழைப்புகள் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளன என தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ராய்க்கு சிங் எழுதியுள்ள கடிதத்தில், 2017ம் ஆண்டு அக்டோபர் 3 தேதியிட்ட உங்களது கடிதம் எனக்கு கிடைத்துள்ளது. முறையான நடவடிக்கை எடுப்பதற்காக இந்த விவகாரம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். இந்த கடிதம் ராய்க்கு இன்று கிடைத்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றத்திலும் இந்த விவகாரம் பற்றி ராய் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.