தேசிய செய்திகள்

மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை; மத்திய மந்திரி தகவல்

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது.

பெங்களூரு,

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்பட பலர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த போர் பதற்றத்தால் மத்திய கிழக்கில் உள்ள பல்வேறு நாடுகள் தங்கள் வான்பரப்பை மூடியுள்ளன. விமான சேவையும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் வசித்து வரும் லட்சக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், மத்திய கிழக்கில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய மந்திரி பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கர்நாடகாவின் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த பிரஹலாத் ஜோஷி, உலகின் எந்த பகுதியிலாவது இந்தியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டால் அவர்கள் பத்திரமாக நாடு திரும்புவதை மத்திய அரசு உறுதி செய்யும்.

ரஷியா - உக்ரைன் போரில் உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை பத்திரமாக மீட்டோம். இந்தியர்களை பத்திரமாக மீட்பதுதான் எங்கள் முன்னுரிமை. மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பதற்றப்பட வேண்டாம். இந்தியர்கள் அனைவரையும் பத்திரமாக நாட்டிற்கு அழைத்துவர மத்திய அரசு தயாராகி வருகிறது

என்றார்.