தேசிய செய்திகள்

‘சாணக்கியரே அதிர்ச்சி அடைந்திருப்பார்..’ - மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து பிரியங்கா காந்தி

இந்திய அரசியலமைப்பை சிதைப்பதன் மூலம் பா.ஜ.க. தனது கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துகிறது என பிரியங்கா காந்தி விமர்சித்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் 3 நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இடஒதுக்கீடு சீர்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதில் 2 பெரிய சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதுடன், அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்கள் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது.

இன்றைய விவாதத்தின்போது பிரியங்கா காந்தி பேசுகையில், “மகளிர் இடஒதுக்கீட்டை காங்கிரஸ் ஆதரித்தாலும், இன்றைய விவாதம் அதைப்பற்றியது அல்ல, மாறாக அந்த மசோதாவிற்கு பின்னால் இருக்கும் அரசியல் நோக்கம் பற்றியது.

மகளிருக்கான இடஒதுக்கீடு என்பது, உண்மையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அரசியல் துருப்புச் சீட்டு ஆகும். இந்திய அரசியலமைப்பை சிதைப்பதன் மூலம் பா.ஜ.க. தனது கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துகிறது.

நீங்கள் அனைவரும் முழுமையாகத் திட்டமிட்டு வந்துள்ளீர்கள். இன்று சாணக்கியர் உயிரோடு இருந்திருந்தால், உங்கள் தந்திரத்தைக் கண்டு அவரே அதிர்ச்சி அடைந்திருப்பார்” என்று கூறினார். சாணக்கியர் குறித்து பிரியங்கா காந்தி பேசியதைக் கேட்டு அவையில் சிரிப்பலை எழுந்தது.

SCROLL FOR NEXT