தேசிய செய்திகள்

பனை நுங்கை ருசித்து சாப்பிட்ட சந்திரபாபு நாயுடு

திருப்பதி கங்கையம்மன் திருவிழாவுக்கு அரசு சார்பில் அம்மனுக்குபட்டு வஸ்திரத்தை காணிக்கையாக சந்திர பாபு நாயுடு சமர்ப்பித்தார்.

ஐதராபாத்,

தெலுங்கு தேசம் கட்சியின் தேசியத் தலைவரான சந்திர பாபு நாயுடு ஆந்திராவின் முதல்-அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். இந்தநிலையில், சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பம் பகுதியில் கடந்த 2 நாட்களாக திருப்பதி கங்கையம்மன் திருவிழா வெகு சிறப்பாக நடந்தது.

இதில் 2-ம் நாளான நேற்று காலை, சந்திரபாபு நாயுடு தம்பதி சமேதமாக அரசு சார்பில் அம்மனுக்குபட்டு வஸ்திரத்தை காணிக்கையாக சமர்ப்பித்தார். பின்னர் அவர் நேற்று மதியம் கார் மூலம் பெங்களூரு சென்று, அங்கிருந்து விஜய வாடாவிற்கு விமானம் மூலம் சென்றார். அப்போது குப்பம் பகுதியை அடுத்த தஞ்சம்ம கொட்டாலா எனும் இடத்தில் சாலை ஓரம் ஒரு வியாபாரி பனை நுங்குகளை விற்றுக் கொண்டிருந்தார்.

இதனை பார்த்தது, சந்திர பாபு நாயுடுவுக்கு நுங்கை சாப்பிட ஆசை ஏற்பட்டது. உடனடியாக காரை நிறுத்தச் சொன்ன சந்திரபாபு நாயுடு, அக்கடைக்காரரிடம் சென்று தனக்கும், தனது மனைவி மற்றும் அங்கு உடன் இருந்தவர்களுக்கும் பனை நுங்கு தரும்படி கேட்டார். ஒரு மாநில முதல்-மந்திரியை பார்த்த மகிழ்ச்சியில் அந்த வியாபாரி பல நுங்குகளை வெட்டி முதல்-மந்திரியிடம் வழங்கினார்.

அதனை ஆசையோடு சாப்பிட்டு, அதற்கான பணத்தை கொடுத்துவிட்டு, அந்த நுங்கு வியாபாரியிடம் நலம் விசாரித்து விட்டு புறப்பட்டுச் சென்றார் சந்திரபாபு நாயுடு. முதல்-மந்திரி தனது கடையில் நுங்கு வாங்கி சாப்பிட்டதை கண்டு கடைக்காரர் பூரித்து போனார்.