புதுடெல்லி,
சென்னையில் பணியாற்றி வரும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரக, துணை இயக்குனர் சுஷில் குமார் கர்க் என்பவர் தனியார் நிறுவனத்தின் விமானங்களுக்கான தகுதிச் சான்றிதழை வழங்குவதற்காக லஞ்சம் கோரியதாக சி.பி.ஐ.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, 'ஏக்வி ஏர் டிரெய்னிங் ஆர்கனைசேஷன்' என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குனர் சச்சின் கேஷவ் பானேவிடம் இருந்து சுஷில் குமார் கர்க் ரூ.2.5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து அதிரடியாக கைது செய்தனர். லஞ்சம் கொடுத்த தனியார் நிறுவன இயக்குனர் சச்சினும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. மேலும், கைது செய்யப்பட்ட சுஷில் குமார் கர்க்கை டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.