கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள துபாரே யானைகள் முகாமில் 2 வளர்ப்பு யானைகள் மோதிக்கொண்டபோது இடையில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசி (33) என்பவர் சுற்றுலாவுக்காக துபாரே முகாமுக்கு சென்றிருந்தார். அப்போது ஆற்றங்கரையில் நின்று யானைகள் குளிப்பாட்டப்படுவதை பார்த்துக்கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில், வளர்ப்பு யானைகளான ‘கஞ்சன்’ மற்றும் ‘மார்த்தாண்டா’ என்ற 2 யானைகள் குளிப்பாட்டப்பட்டுக் கொண்டிருந்தபோது திடீரென ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. யானைப்பாகன்கள் கட்டுப்படுத்த முயன்றபோதும், கஞ்சன் யானை மார்த்தாண்டாவை வேகமாக மோதியது. இதில் நிலை தடுமாறிய மார்த்தாண்டா யானை கீழே விழுந்து. அப்போது , அருகில் நின்றிருந்த துளசி யானையின் கீழ் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கர்நாடக வனத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் துறை மந்திரி ஈஸ்வர் கந்த்ரே ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.அத்துடன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கவும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.மேலும், வனவிலங்குகளிடமிருந்து சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான தூரத்தை கடைப்பிடிப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.