தேசிய செய்திகள்

சத்தீஷ்கார்: அதிகாலை நடைப்பயிற்சியின்போது விபரீதம்; வாகனம் மோதி 3 நண்பர்கள் பலி

3 பேரும் அதிகாலையில் ஒன்றாக நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வழக்கம் கொண்டிருந்தனர்.

ஜன்ஜ்கீர்

சத்தீஷ்காரில் அதிகாலை நடைப்பயிற்சியின்போது வாகனம் மோதி 3 நண்பர்கள் பலியான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

சத்தீஷ்காரின் ஜன்ஜ்கீர் மாவட்டத்தில் தோங்ரி கிராமத்தில் வசித்து வந்தவர் தில்ஹரன் தாஸ் வைஷ்ணவ் (வயது 62). கூட்டுறவு சொசைட்டியில் கிளை மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய நண்பர்கள் கேதர் பாரெத் (வயது 52) மற்றும் சந்து யாதவ் (வயது 70). இவர்கள் அனைவரும் தோங்ரி கிராமத்தில் வசித்து வருவதுடன் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர்.

3 நண்பர்கள்

இவர்கள் 3 பேரும் அதிகாலையில் ஒன்றாக நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வழக்கம் கொண்டிருந்தனர். அவர்கள் இன்று வழக்கம்போல் அதிகாலையில் 4 மணியளவில் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். 2 கி.மீ. தொலைவுக்கு சென்றனர். அப்போது அந்த வழியே விரைவாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர்களின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

கிராமவாசிகள்

இந்த விபத்தில், நண்பர்கள் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். மோதிய வேகத்தில் அவர்கள் வெவ்வேறு இடங்களில் போய் விழுந்தனர். இதனை பார்த்த கிராமவாசிகள் உடனடியாக அந்த பகுதிக்கு ஓடினர். சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

எனினும், அவர் 3 பேரும் படுகாயமடைந்து பலியாகி விட்டனர். இதுபற்றி பலோட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.