தேசிய செய்திகள்

சத்தீஷ்கார் ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் விசாரணை

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநில ஐகோர்ட்டு பிலாஸ்பூரில் அமைந்துள்ளது. ஐகோட்டில் இன்று நீதிபதிகள், வழக்கறிஞர்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஐகோர்ட்டு அதிகாரப்பூர்வ இமெயில் முகவருக்கு இன்று காலை 11.30 மணியளவில் மெயில் வந்தது. அந்த மெயிலில் ஐகோர்ட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், வெடிகுண்டு இன்னும் சற்றுநேரத்தில் வெடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஐகோர்ட்டு அதிகாரிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, ஐகோர்ட்டில் இருந்து வழக்கறிஞர்கள், பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

பின்னர், போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் ஐகோர்ட்டு முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இமெயில் மூலம் ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.