தேசிய செய்திகள்

தொகுதி மறுவரையறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார்: கிரண் ரிஜிஜூ

எதிர்க்கட்சிகள் வதந்திகள் பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இன்று தாக்கல் செய்யப்பட்ட உள்ள 3 மசோதாக்கள் குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஒரு வரலாற்று சிறப்புமிக்கதாகும். மக்களவையிலும், பல்வேறு மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

தொகுதி மறுவரையறையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார். ஒரு சிலரால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார். தொகுதி மறுவரையறை குறித்து தென்னிந்தியாவில் தவறான தகவலை சில கட்சிகள் பரப்புகின்றன. தென்னிந்திய மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம். தொகுதி மறுவரையறை குறித்து எதிர்க்கட்சிகள் வதந்திகள் பரப்புவதை நிறுத்த வேண்டும்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக காரணத்தை தேடும் எதிர்க்கட்சிகள் அது கிடைக்காததால் பொய்யான தகவல்களை பரப்பி மக்களை குழப்புகிறது. மகளிருக்கான இட ஒதுக்கீட்டைத் தோற்கடிக்க நினைத்தால் அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

பெண்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று நினைத்தால் மத்திய அரசு கொண்டுவரும் மசோதாக்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு யூனியன் பிரதேசமும் கவலைப்படத் தேவையில்லை. அனைவருக்கும் நியாயமான வாய்ப்பு, பிரதிநிதித்துவம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT