முதல் அமைச்சர் விஜய் 3 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். முதல் நாளான இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மும், துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்த்தார். இதையடுத்து, டெல்லியில் உள்ள காங்கிரஸ் முக்கிய தலைவர் சோனியா காந்தி இல்லத்திற்கு சென்ற விஜய், அவரையும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ராகுல் காந்தியும் உடன் இருந்தார். தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது.அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ள சூழலில், சோனியா காந்தியை முதல் முறையாக சந்தித்த விஜய் நன்றி தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பிறகு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் டி.ராஜாவையும் விஜய் சந்தித்தார்.
நாளை டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் விஜய் பங்கேற்கிறார். இந்தக் கூட்டத்தின் போது பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களையும் விஜய் சந்தித்து பேசுவார் எனத்தெரிகிறது. நிதி ஆயோக் கூட்டத்திற்கு பிறகு, மாநில முதல் மந்திரிகளுக்கு பிரதமர் மோடி தனது இல்லத்தில் இரவு உணவு இருந்து வைக்கிறார். இந்த விருந்து நிகழ்ச்சியிலும் விஜய் பங்கேற்க உள்ளார்.
நாளை மறுநாள் தனது டெல்லி பயணத்தை நிறைவு செய்துவிட்டு கர்நாடக மாநிலம் கொல்லூர் செல்லும் விஜய், அங்குள்ள மூகாம்பிகை கோவிலுக்கு செல்ல உள்ளார். டெல்லியில் இருந்து விமானத்தில் கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மங்களூர் கோவிலுக்கு செல்கிறார். அங்கிருந்து காரில் விஜய் மூகாம்பிகை கோவிலுக்கு செல்கிறார். கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து தமிழகம் திரும்புவார் எனத்தெரிகிறது.